டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி மக்கள் காத்திருப்பு போராட்டம்!

மதுரை கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி சின்னக்கற்பூரம்பட்டியில் இன்று டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு முதல் கம்பாளிபட்டி வரையிலான 38,500 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கம்பூர் ஊராட்சி சின்னக்கற்பூரம்பட்டியில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுற்றியுள்ள கிராமத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதில், “அரிட்டாபட்டி- வல்லாளப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் அறிவிக்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போல் கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். மேலவளவு முதல் கம்பாளிபட்டி வரை 38,500 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்க திட்ட வரைவு அறிக்கையை கைவிட வேண்டும். புதிதாக ஏலம் விடக்கூடாது. ஈடுபடக்கூடாது. மதுரை மாவட்டத்தை பண்பாட்டு மண்டலமாகவும், முல்லைப் பெரியாறு பாசனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

காத்திருப்பு போராட்டத்தில் கம்பூர், அலங்கம்பட்டி, கேசம்பட்டி பட்டூர், சேக்கி பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.