மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (23.12.2024) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேமுதிக கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, விஜயகாந்த் மகன் வி.விஜய பிரபாகரன், இளைஞரணிச் செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்து மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, நினைவு தின நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். அதுபோது, பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வெளியே செய்தியாளர்களுடன் பேசிய தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ், ‘விஜயகாந்த் நினைவு தினத்தன்று ஒரு கி.மீ தூரத்துக்கு நினைவு தின பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் அழைக்க உள்ளோம்’ என்று கூறினார்.