பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில், மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யுடியூப்பரும் சவுக்கு மீடியா முதன்மை செயல் அதிகாரியுமான சவுக்குசங்கர் கடந்த 03.04.2024 இரவு தேனி பழனிச்செட்டிப்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். அவருடன் அவரது ஓட்டுநர் ராம்பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகியோரும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் 04.05.2024 அதிகாலை 1:30 மணிக்கு கோவையிலிருந்து வந்த சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் அதிகாலை 3 மணியளவில் சவுக்குசங்கரை கைது செய்து கார் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அவருடன் தங்கி இருந்த ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகிய இருவரையும் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து பழனிச் செட்டிபட்டி காவல் நிலையம் கொண்டு சென்று அவர்களிடம் சுமார் 18 மணி நேர விசாரணைக்குப் பின் நள்ளிரவு 11.30 மணிக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில், அவர்களை கைது செய்ய சென்ற பெண் போலீசாரை தாக்க முயன்றதாகவும், அவதூறாக பேசியதாகவும், அவர்கள் வந்த காரில் தலா 100 கிராம் வீதம் நான்கு பாக்கெட்டுகளில் மொத்தம் 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகவும் 294(4)359,பெண்கள் வன்கொடுமை சட்டம் (4)போதைப்பொருள் பயன்பாடு தடைச் சட்டம் 8 (C) 20 B ii (A), 29 (1) ,25 ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் அவர்கள் வந்த இனோவா கிரிஸ்டா கார்,ரொக்கப் பணம் ரூ.70,000, மூன்று கேமராக்கள், லேப்டாப்புகள், மணி பர்ஸ், ஏடிஎம் கார்டுகள், ஆதார் கார்டு பான் கார்டு, மொபைல் போன்கள், ஓட்டுனர் உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் கமுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர் இந்த வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் இந்த வழக்கில் 5 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதிலும் அவர் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரியும்,அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரியும் அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதில் அவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் பதினாறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் சவுக்குசங்கர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கு விசாரணையானது மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகி வந்தனர். கடந்த 17ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது மற்ற 4 பேரும் ஆஜரான நிலையில் சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் மனு அளித்த நிலையில், அதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி செங்கமல செல்வன் சவுக்கு சங்கருக்கு பிடி ஆணை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து அன்றே சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் பழனிசெட்டிபட்டி போலீசார் சென்னை சென்று சவுக்கு சங்கரை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு 18ஆம் தேதி மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து மதுரை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி செங்கமல செல்வன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது இனிவரும் காலங்களில் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என சவுக்கு சங்கர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் 15 நாட்கள் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் கையில பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.