தமிழக முதல்வர் ஸ்டாலின் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காலத்தால் அழியாத இசைமுரசு நாகூர் ஹனிபாவின் கம்பீரக்குரலுடன் கூடிய பாடல் குறுந்தகட்டினை வெளியிட்டார்.
இது குறித்து அரசு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (25.12.2024) காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, தமிழ்நாட்டின் நல்லிணக்க வரலாற்றிற்குச் சான்றளிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள “ஹபீபி” என்ற திரைப்படத்தில் Artificial Intelligence தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காலத்தால் அழியாத இசைமுரசு நாகூர் ஹனிபாவின் கம்பீரக்குரலுடன் கூடிய பாடல் குறுந்தகட்டினை வெளியிட்டார்.
இயற்கையிலேயே இசை ஞானம் கொண்டிருந்த நாகூர் ஹனிபா தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாடல் திறத்தாலும் உலகெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். நாகூர் ஹனிபா நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பாடல்களையும், திராவிட இயக்கப் பாடல்கள் மற்றும் இதர பாடல்களையும் பாடி பெரும் புகழ்பெற்றவர். திமுகழகத் தோழர்களை தன் காந்தக் குரலில் கவர்ந்திழுத்த ‘அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’, ‘ஒடி வருகிறான் உதயச்சூரியன்’ மற்றும் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’, ‘எல்லோரும் கொண்டாடுவோம்’, ‘’நட்ட நடு கடல் மீது’, ‘உன் மதமா என் மதமா’, போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை ஆகும்.
சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கிய நாகூர் ஹனிபா, நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். பட்டுக்கோட்டை அழகிரி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கண்ணியத்தலைவர் காயிதே மில்லத் ஆகியோரது அன்பையும் பெற்றவர். “இசை முரசு” நாகூர் ஹனிபா தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றியவர். நாகூர் ஹனிபா நிறைவான வாழ்க்கை வாழ்ந்து 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் நாள் மறைந்தார்.
தமிழ் இசைக்கும், திரை இசைக்கும் சுமார் 75 ஆண்டுகள் தொண்டாற்றிய நாகூர் E.M. ஹனிபாவின் பங்களிப்பை போற்றி பெருமை சேர்க்கும் வகையில், நாகப்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு “இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா தெரு” என்றும், சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு “இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா” என்றும் பெயரிட்டு அழைக்க, முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டு, அவரது புகழுக்கு பெருமை சேர்த்தார். அதற்காக நாகூர் ஹனிபாவின் குடும்பத்தினர் 21.12.2024 அன்று முதல்வரைச் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர்கள் எஸ்.ஆஸ்டின், ப.தாயகம்கவி, எம்.எல்.ஏ., தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, கழக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் இறையன்பன் குத்தூஸ் மற்றும் “ஹபீபி” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடித்துள்ள திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா, – இந்த ஹபீபி திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதிய கவிஞர் யுகபாரதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் சி.எஸ்.சாம், இயக்குநர் மீரா கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.