இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும் கட்சி அமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், விழாவில் கட்சித் தோழர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், ஸ்ரீவைகுந்தம் என்ற ஊரில், பெரும் விவசாயக் குடும்பத்தில் 1925 டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி – கருப்பாயி தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தவர். இவரோடு பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் சேர்ந்து பத்து பிள்ளைகள் கொண்ட பெரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீவைகுந்தத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வி பயின்றவர். இவரது பள்ளி ஆசிரியரான பலவேசம் அவர்கள் மூலம் விவேகானந்தர், பாரதி, திரு.வி.க. போன்ற ஆளுமைகளையும், அவர்தம் படைப்புகளையும் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் கம்யூனிச சிந்தாந்தத்தையும் பயிற்றுவித்தார்.
இதன் விளைவாக 1943 ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அமைப்புரீதியாக செயல்படத் தொடங்கினார். அதில் இன்றுவரை சோர்வும், களைப்பும் இல்லாமல் மிகுந்த நம்பிக்கையோடு, 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் பெருமைக்குரியவர். தோழர் இரா.நல்லகண்ணு பிறந்த நாளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினமும் ஒரே நாளில் (26.12.1925) அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க சரித்திர சிறப்பாகும்.
தோழர் இரா.நல்லகண்ணு 100-வது பிறந்த நாளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவும் நாளை (26.12.2024 – வியாழன் காலை 9 மணியளவில்) கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் (செவாலியே சிவாஜி கணேசன் சாலை) மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெறுகின்றது. இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர் காதர் முகைதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா எம்.எல்.ஏ., கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, தமிழ் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள் முன்னாள் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தோழர் இரா.நல்லகண்ணுவிற்கு வாழ்த்து கூற உள்ளனர்.
கட்சியின் நூற்றாண்டையொட்டி பாலன் இல்லத்தில் அமைந்துள்ள புதிய கொடி கம்பத்தில் இரா.நல்லகண்ணு கொடியேற்றி கட்சி நூற்றாண்டு விழாவை தொடக்கி வைக்கிறார். விழாவில் கட்சித் தோழர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.