பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள தனது வீட்டில் சாட்டையால் அடித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, ‘என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. சமூகவிரோதிகளை அடிச்சு தூக்க வேண்டிய தலைவன் தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்ளுவதை பார்க்க முடியவில்லை. அண்ணாமலையின் வழி, அனைவரின் வழியானால், தமிழகம் அறச்சீற்றம் கொண்டால், மாற்றம் வரும். வரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு பாஜக கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. ஒரு பெண்ணாக இந்த பூமியில் ஏன் பிறந்தோம் என்று சிந்திக்கும் அளவுக்கு ஒரு கொடூரமான செயல் மாணவிக்கு நடந்திருக்கிறது. தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை என்பது இந்த சம்பவம் மூலம் உறுதியாகி இருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி தி.மு.க.வில் பொறுப்பில் இருக்க கூடிய ஒரு நபர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அமைச்சர், முக்கிய நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த கட்சியின் போர்வையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார். சென்னையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான (முதல் தகவல் அறிக்கை) எப்.ஐ.ஆர். வெளியானது எப்படி?. இந்தியா முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களும் கிரைம் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் (சி.சி.டி.என்.எஸ்.) பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை யாரும் ஹேக் செய்ய முடியாது. போலீஸ் துறையை தவிர வேறு யாரும் அந்த எப்.ஐ.ஆரை வெளியிட முடியாது. அதில் மாணவி குற்றம் செய்ததுபோல பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனை படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது. இப்படி ஒரு முதல் தகவல் அறிக்கை எழுதியதற்கு போலீசார் வெட்கப்பட வேண்டும். மேலும் மாணவியின் பெயர், அவரது தந்தை பெயர், செல்போன் எண், ஊர் என அனைத்தையும் வெளியிட்டு, அந்த குடும்பத்தையே நாசம் செய்து விட்டனர். இது வெட்கக்கேடான செயல் ஆகும்.
அண்ணாமலை திரும்பி வந்ததும் கலவரம் வெடித்ததாக ஒரு அமைச்சர் கூறுகிறார். இப்படிப்பட்ட சம்பவம் நடந்ததற்கு நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும். பல்வேறு குற்றச்சம்பவங்கள் இருந்தும் அந்த நபர் திமுகவில் இருந்ததால் அவரை போலீசார் கண்காணிக்கவில்லை. அதனால் தான் அந்த நபர் தைரியமாக மற்றொரு குற்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்திருக்கிறார்கள். நாங்கள் என்ன எங்கள் வீட்டுக்கு தண்ணீர் வரவில்லை என்றா ஆர்ப்பாட்டம் செய்கிறோம். மக்கள் பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டம் செய்ததால் கைது செய்து இரவு வரை கழிப்பறை வசதி இல்லாத மண்டபமா பார்த்து அடைத்து வைக்கிறீர்கள். ஒரே இடத்தில் கூட்டமாக வந்தால்தானே கைது செய்வீர்கள். இனி ஒவ்வொரு தொண்டர் வீட்டிற்கு முன்பும் போராட்டம் நடைபெறும். இன்று காலை 10 மணிக்கு ஒவ்வொருத்தர் வீட்டு முன் போராட்டம் நடத்த போகிறோம். என் வீட்டின் முன் நடைபெறும் போராட்டத்தில் எனக்கு நானே 6 முறை சாட்டையால் அடித்து கொள்வேன். பாஜக கட்சி தொண்டர்கள் யாரும் இதில் ஈடுபட வேண்டாம். நீங்கள் வீட்டிற்கு வெளியே வந்து நிற்பது உங்களது கடமையாகும். தமிழ்நாட்டில் ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன். நாளை முதல் 48 நாட்களுக்கு நான் விரதம் இருக்க போகிறேன். அப்போது தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியிருந்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியபடி இன்று காலை தான் கூறியபடி, கோவையில் உள்ள வீட்டின் முன்பு தன்னை 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. சாட்டை அடித்துக்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்றன. அவ்வளவு எளிதாக எப்.ஐ.ஆரை பதிவிறக்கம் செய்ய இயலாது. சாட்டையில் அடிப்பது நமது தமிழ் மரபிலே உள்ளது. அடுத்த தோல்வி வந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். லண்டன் பயனத்திற்கு பிறகு எனது பாதை இன்னும் தெளிவாகி உள்ளது” என்றார்.
இதனிடையே அண்ணாமலை சாட்டையால் அடித்து குறித்து திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜகவினர் உள்பட பலர் குரல் எழுப்பி வருகிறார்கள். நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில், “என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. சமூகவிரோதிகளை அடிச்சு தூக்க வேண்டிய தலைவன் தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்ளுவதை பார்க்க முடியவில்லை. அண்ணாமலையின் வழி, அனைவரின் வழியானால், தமிழகம் அறச்சீற்றம் கொண்டால், மாற்றம் வரும். வரவேண்டும்” என்று கூறியுள்ளார்.