அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதான நபர் குறித்து விமர்சித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “அந்த மிருகத்தை கூண்டுல அடைக்கும்போது வழுக்கி விழுந்துருக்கு, இன்னும் சரியா விழுந்துருக்கணும்னு நினைத்தேன்” என கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியதாவது:-
பெண்களுக்கான பாதுகாப்பு அவர்களுக்கான பாதுகாப்பான சூழல்களை உருவாக்குவது தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது என்று மத்திய அரசு தனது டேட்டாவில் தெரிவித்து இருக்கிறது. இன்று இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான சிட்டியாக சென்னையும் கோவையும் இருக்கிறது. ஆனால் நமது எதிர் அணியினர் இதற்கு எதிரான பிரசாரத்தை கையில் எடுத்திருக்கின்றனர். நேற்று சென்னையில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது. இந்த செயலில் ஈடுபட்ட மிருகத்தை முதல்வர் கூண்டில் அடைத்திருந்தார். மிருகம் கூண்டில் அடைக்கப்பட்டபோது வழுக்கி விழுந்திருக்கிறது. அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்னும் கொஞ்சம் சரியாக வழுக்கி விழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன் நான். ஆனாலும் இப்படியான கீழ்தரமான மிருகங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. இப்படியான மிருகங்களை கூண்டில் அடைக்கும் வேலையைத்தான் நமது முதல்வர் செய்து வருகிறார். அவர் ஒரு ஹன்ட்டராக வேலை செய்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.
கடந்த 23ம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது இந்த சம்பவத்தை புதரில் மறைந்திருந்து கவனித்த ஞானசேகரன் என்பவர், நண்பரை துரத்திவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்து மாணவி அளித்த புகாரில் ஞானசேகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் சமூக வலைதங்களில் லீக் ஆகியிருந்து. இதில் மாணவியின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவை கசிந்தன. பாலியல் புகாரில் பாதிக்கப்பட்டவரின் முகவரி வெளியிடப்படக்கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதல். அப்படி இருக்கையில் எஃப்ஐஆர் எப்படி லீக் ஆனது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுகவின் கூட்டணி கட்சிகளே சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த காவல்துறை ஆணையர் அருண், தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்துள்ளதாக கூறியுள்ளார். மட்டுமல்லாது இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் வழுக்கி விழுந்துவிட்டார்கள் என்று கூறி, அவர்களின் கை கால்களை உடைப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.