அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. முக்கியமாக, ‘எப்ஐஆர் நகல் எப்படி பொது வெளியில் கசிந்தது’ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த அமைச்சர் ரகுபதி, “எப்ஐஆர் நகல் வழங்குவது வழக்கம். அவர்கள் மூலமாக கூட அந்த எப்ஐஆர் நகல் வெளியில் வந்திருக்கலாம்.” என்று கூறியுள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஞானசேகரனுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டோம். அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் வரும்போது என் அருகே நின்று யாராவது போட்டோ எடுப்பதால் அவர்கள் எனக்கு வேண்டியவர்களாகி விடுவார்களா.? எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள தொடர்பை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டச் சொல்லுங்கள். அரசியல்வாதி செல்லும் இடங்களில் எல்லாம் யாராவது நின்று போட்டோ எடுக்கத்தான் செய்வார்கள். போட்டோவுக்கு மறுத்தால், பாருய்யா போட்டோ கூட எடுக்க அனுமதிப்பதில்லை என எங்கள் மீது பாய்வார்கள். அதனால் புகைப்படம் எடுப்பதை எங்களால் தடுக்க முடியாது. எனவே வெறும் போட்டோவை மட்டும் காட்டி குற்றம் சாட்டுவதில் அர்த்தமே இல்லை.
சிசிடிவி ஒயர் இருக்கிறதா, என்ன ஆனது என்பதை விசாரணையில் கண்டுபிடித்து விடுவோம். ஞானசேகர் எந்த வழியில் வந்தார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் விசாரணையில் தான் தெரியவரும். அப்போது பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிர்பயா திட்டம் நிதி என்ன ஆனது, எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்றும் தெரியவரும். காவல்நிலையத்தில் புகாரளிப்பவர்களுக்கு எப்ஐஆர் நகல் வழங்குவது வழக்கம். அவர்கள் மூலமாக கூட அந்த எப்ஐஆர் நகல் வெளியில் வந்திருக்கலாம். புகார்தாரர்களுக்கு நகல் அளிப்பது தான் சட்டம். எப்ஐஆரில் வாசகங்கள் தரம் குறைவாக இடம் பெற வாய்ப்பில்லை. காவல்துறை அப்படி செய்ய மாட்டார்கள். அதை முழுவதுமாக படித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழகம் 250 ஏக்கர் பரப்பளவை கொண்டது. அதில் திருட்டுத்தனமாக இரவு நேரத்தில் நுழைந்துள்ளனர். இதன் பிறகு அங்கு சுற்றிலும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர் குற்றவாளி என்பது நேற்றைக்கு தானே தெரிந்தது. அதற்கு முன்பு அந்த தகவல் உங்களுக்கும், எங்களுக்கும் தெரியவில்லையே. அதை இனிமேல் தான் விசாரிக்க வேண்டும். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அவர் சிறையில் தான் இருந்திருப்பார். எப்படி வெளியில் வரமுடியும். சிலர் கற்பனையாக எங்கள் மீது புகார் சொல்கிறார்கள். அவர் மீதுள்ள வழக்குகளை காவல்நிலையங்களில் முழுமையாக விசாரித்துவிட்டு சொல்கிறேன். சிசிடிவி கேமரா இல்லை என்றும், பிறகு காட்சிகளை ஏன் வெளியிடவில்லை என்றும் மாறுபட்ட புகார்களை கூறுகிறார்கள். இந்த வழக்கு நீதிமன்றம் சென்றுவிட்டது. இனிமேல் யாராலும் தப்பிக்க முடியாது. சிசிடிவி காட்சிகளில் அவரது உருவம் இருந்தால் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாதளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.