பாலியல் வன்கொடுமை நடந்த இடத்தில் சிசிடிவி இல்லாதது ஏன்?: அமைச்சர் விளக்கம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் சிசிடிவி வேலை செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கோவி செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-

பல்கலைக்கழக மாணவி புகார் அளித்த உடனே குறைந்த நேரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி 2 நாட்கள் கழித்து புகார் அளித்துள்ளார். அது பெண்களுக்கே உண்டான பயம், அச்சம், பாதுகாப்பின்மை காரணமாக இருக்கலாம். அதை நாம் குறை சொல்ல முடியாது. அவர் 2 நாட்கள் கழித்து புகார் அளித்திருந்தாலும் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் புகார் அளிக்கவே பெண்கள் அஞ்சினர். ஆனால் தற்போது திமுக ஆட்சி மீதுள்ள நம்பிக்கை காரணமாக பெண்கள் பாலியல் புகார்களை அளிக்க முன் வருகிறார்கள். பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை நடைபெறுகிறது. எந்த ஒரு மாணவியும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

தேசிய மகளிர் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுனங்களில் மாணவர்களுக்கு உதவி மையங்கள் அமைக்கப்படும். பல்கலைக்கழக நேரம் அல்லாது மற்ற நேரங்களில் வருவோரிடம் அடையாள அட்டை காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த இடம் சிசிடிவிக்கு உட்படாத முட்புதர் நிறைந்த பகுதி. அந்த முட்புதர்களை அகற்றி இரவு நேரத்தில் விளக்கு அமைத்து போதிய வெளிச்சம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கோவி செழியன் கூறியுள்ளார்.