தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 8 கேள்விகளை நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அண்ணாமலை அண்ணாவுக்கு சில கேள்விகள் என்ற பெயரில் 8 கேள்விகளை கேட்டுள்ளார். அந்த கேள்விகள் மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்த போது நீங்கள் அமைதி காத்தது ஏன்? கொரோனா பெருந்தொற்றின் போது நிறைய உயிரிழப்புகள் நடந்த போது பால்கனியில் விளக்கேற்ற சொன்னது ஏன்? கொரோனா தொற்றில் பொது இடங்களில் கூட கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் ரதயாத்திரை மேற்கொள்ள சில தலைவர்கள் முயற்சித்தது ஏன்? தடுப்பூசி கொள்கையில் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தென்னிந்தியாவில் இருக்கும் விவசாயிகளும் மனிதர்கள்தானே, அவர்களை ஏன் மத்திய அரசு தவிர்க்கிறது? தென்னிந்தியாவில் இருக்கும் மாணவர்களும் மனிதர்கள்தானே, அவர்களுக்கு நீட் எனும் கொடூரம் எதற்காக நடத்தப்படுகிறது? ஏன் ஒரே ஒரு மதம் மட்டும் ஓங்கி இருக்கிறது? குஜராத்தில் என்ன நடக்கிறது என்பதற்கான பதில்கள் கூறாதது ஏன்? இவ்வாறு 8 கேள்விகளை திவ்யா சத்யராஜ் கேட்டுள்ளார்.
மேலும் எனது ஆங்கில புலமைகளில் இலக்கண பிழையோ எழுத்து பிழைகளோ இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள் அண்ணா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி கடந்த 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஞானசேகரன் என்ற 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் புழலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டித்து வருகின்றன. அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சம்பவம் நடந்த இடத்தில் கேமரா இல்லாதது ஏன், இத்தனை பெரிய பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். அது போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, கைது செய்யப்பட்ட நபர் திமுக நிர்வாகி என கூறி துணை முதல்வர் உதயநிதியுடனும் அமைச்சர் மா சுப்பிரமணியத்துடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் அந்த நபர் திமுக நிர்வாகியே இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் மறுத்தனர். மேலும் தங்களுடன் யாராவது வந்து நின்று புகைப்படம் எடுத்தால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் திமுக அரசை கண்டித்தும் மாணவிக்கு நடந்த அநியாயத்தை கண்டித்தும் கோவையில் உள்ள தனது வீட்டு வாசலில் அண்ணாமலை 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். பச்சை வேட்டி அணிந்திருந்த அவர் தனது வெறும் உடம்பில் இது போல் அடித்துக் கொண்டதை பாஜக நிர்வாகிகள் உருக்கமாகவும் மற்றவர்கள் கேலியாகவும் பார்க்கிறார்கள்.
இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், மாணவிக்கு நடந்தது கண்டிக்கத்தக்கது, யாராலும் ஏற்க முடியாதது, அந்த மாணவி புகார் கொடுத்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஆனால் அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய பெரும் போராட்டம் நடத்தப்பட்ட பிறகுதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கைது செய்தது. அந்த பொள்ளாச்சி சம்பவம் நடந்த போதும் மணிப்பூரில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட போதும் அண்ணாமலை எங்கே போயிருந்தார் என ஆர்.எஸ்.பாரதி கேட்டிருந்தார்.