மாணவியை சீண்டிய ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இவ்வளவு நெருக்கமா?: அண்ணாமலை!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் தான் எனவும், சமீபத்தில் கூட அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை நகரின் மையப் பகுதியான கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் மறைவான இடத்தில் அந்த மாணவியும் அவரது காதலனும் பேசிக் கொண்டிருந்தனர். அண்ணா பல்கலை வன்கொடுமை: அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மாணவனை கடுமையாக தாக்கி விட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஞானசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவியை மிரட்டி அத்துமீறிய ஞானசேகரன் திமுக நிர்வாகி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவி வருகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உள்ளிட்ட பலருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் சர்ச்சை எழுந்தது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான் என தொடர்ந்து கூறி வருகிறார்.

முதலில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுருந்த ட்விட்டர் பதிவில், “கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டவர். திமுக நிர்வாகி, தமிழக மக்கள் இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்?. மு.க. ஸ்டாலின் எப்போதாவது பொறுப்பேற்பாரா? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் திமுக நிர்வாகி என்பது உண்மை அல்ல எனவும், எது நடந்தாலும் திமுகவை குறை கூறுவது அண்ணாமலையின் இயல்பான குணம். அண்ணாமலை கூறுவதால் அது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்று அர்த்தமல்ல, அது உண்மையும் அல்ல என தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்தார்.

இந்நிலையில், ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் தான் எனவும், சமீபத்தில் கூட அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை? குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக அரசு? திமுகவினருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நமது சகோதரிக்கான நியாயத்தை விட, திமுகவைச் சேர்ந்த குற்றவாளி முக்கியமாகிவிட்டாரா?” என கூறியுள்ளார்.