கைது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் மண்டபம் மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் அருகே மண்டபம் துறைமுகம் கடலோரப்பகுதியில் இருந்துகடந்த டிச. 8ம் தேதி கடலுக்கு சென்ற கார்த்திக் ராஜ் மற்றும் சகாய ஆண்ட்ரோஸ் ஆகிய இருவரின் படகுகளில் சென்ற பத்ரப்பன் (55), கண்ணன் (52), முத்துராஜ் (55), காளி (50), யாசின் (46) சேசு, ராமகிருஷ்ணன், வேலு ஆகிய 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி ஷாலினி, 8 பேரையும் டிச. 20ம் தேதி வரையும், பின்னர் 2வது முறையாக டிச. 27ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, 8 மீனவர்களையும் போலீசார், மீண்டும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மீனவர்கள் கைது குறித்து முறையான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, வரும் ஜன. 7ம் தேதி வரை 8 பேரையும் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 8 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.