முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு புதின் புகழாரம்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் நேற்று முன்தினம் மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92.

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். நாட்டின் 13-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். இதன்பின்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு பெற்றார். பிரதமராவதற்கு முன்பு, 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அப்போது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி மந்திரியாக பணியாற்றினார். உலகின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருமாற்றியதில் பெரும் பங்கு வகித்த பெருமைக்குரியவர் ஆவார்.

அவருடைய மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதன்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், பிரதமராக மற்றும் பிற உயர் பதவிகளை வகித்தபோதும், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய தலைசிறந்த தலைவர். இந்தியாவின் நலன்களை உலக அரங்கில் உறுதிப்படுத்தியவர் என மன்மோகன் சிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேபோன்று, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் தனிப்பட்ட முறையில் பெரும் பங்காற்றியவர். இதனால், இரு நாடுகளின் உறவை, ஒரு சிறப்பு சலுகையுடன் கூடிய சாதகம் வாய்ந்த நட்புறவு என்ற அளவில் உயர்த்தினார் என புதின் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. அவருடன் பல்வேறு தருணங்களில் பேசுவதற்கான சந்தர்ப்பம் தனக்கு கிடைத்தது. அவருடைய நினைவை நாம் போற்றுவோம் என்றும் புதின் தெரிவித்து உள்ளார்.