புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

ஆங்கில புத்தாண்டையொட்டி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அருண் தலைமையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல் ஆணையர் அருண் பேசியதாவது:-

டிச.31-ம் தேதி இரவு 9 மணி முதல் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், பைக் ரேஸில் ஈடுபடுபவர்களையும் கண்காணிக்க, சோதனை குழுக்களை அமைக்க வேண்டும்.

மேலும், டிச.31-ம் தேதி மாலை முதல் ஜன.1-ம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. அதனால், மெரினா, நீலாங்கரை, பெசன்ட்நகர், சாந்தோம் உள்ளிட்ட கடற்கரையோரங்களில் அதற்கான முன்னேற்பாடுகளை போலீஸார் மேற்கொள்ள வேண்டும். கடற்கரை மணல் பகுதிகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைக்க வேண்டும். அதேபோல், அனைத்து முக்கிய இடங்களிலும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.