தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலர் ஆனந்த் கைது!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து தவெக தலைவர் விஜய் கைப்பட எழுதிய கடித நகலை, அனுமதியின்றி விநியோகித்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று (டிச.30) கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார். அதோடு, சட்டம் – ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அவர் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், “எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம்” என்று தெரிவித்திருந்தார்.

அந்தக் கடிதத்தின் நகல்களை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், பொது மக்களுக்கு விநியோகித்தார்கள். தனியார் மகளிர் கல்லூரி அருகே விநியோகிக்கக் கூடாது என்று காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில், வாக்குவாதமும் ஏற்பட்டிருந்தது. அப்போது அக்கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை காணச் சென்ற தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் ஆனந்த், சென்னை தியாகராய நகரில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.