தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைமிகுத் தருணம் இது: தங்கம் தென்னரசு!

கன்னியாக்குமரியில் கடலுக்குள் திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை வெள்ளிவிழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தலைவர்கள் பலரும் இது பற்றிய நினைவுகளை பகிர்ந்து வரும் நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைமிகுத் தருணம் இது என்று தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் கடலுக்க்குள் திருவள்ளூவரின் 133 அடி உயர சிலை உள்ளது. நாட்டின் தென் கோடி எல்லையான கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 1990 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. 1998-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவும் பணி தொடங்கியது. இதையடுத்து தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கருணாநிதியால் 1-1-2000 அன்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. இதையொட்டி அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் 2 நாட்கள் விழா நடைபெறுகிறது. வெள்ளி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று மாலை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை மு.க ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

தலைவர்கள் பலரும் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆனது பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைமிகுத் தருணம் இது என்று தெரிவித்துள்ளார். தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது:-

தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைமிகுத் தருணம் இது. இந்தியத் துணைக்கண்டம் தமிழ் நிலத்திலிருந்தேத் தொடங்குகிறது என்பதை உணர்த்துவதற்காக, உலகப்பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவரின் 133 அடி சிலையை முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் நிலைநாட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் சிறப்புமிகு வெள்ளிவிழா ஆண்டில், அறிவின் நிலமான தமிழ்நாட்டின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக, வானுயர் வள்ளுவர் சிலைக்கு “Statue of Wisdom’ என்று பெயரிட்டு தமிழர்களின் சிறப்பை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளார் திராவிட மாடல் முதல்வர் தளபதி திரு.முக ஸ்டாலின் அவர்கள். உயிரினும் மேலான தமிழுக்கு, தனது எழுத்தாணியால் சிறப்பு சேர்த்த அய்யன் வள்ளுவனைப் போற்றும் இப்பெருவிழாவிற்கு அனைவரும் வருக! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.