போபால் யூனியன் கார்பைட் நச்சுக்கழிவு: 40 ஆண்டுக்குப் பின்னர் அகற்ற முடிவு!

போபால் யூனியன் கார்பைட் நச்சுக்கழிவுகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984-ல் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த நச்சுக்கசிவின் காரணமாக போபாலில் 5,479 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தால் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பாதிப்பு அப்பகுதியில் இன்னும் இருப்பதாக மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

இந்நிலையில் யூனியன் கார்பைட் பூச்சிக் கொல்லி தொழிற்சாலையில் 377 மெட்ரிக் டன் எடையுடைய பயங்கரமான நச்சுக்கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. அதை அகற்றுமாறு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவை அகற்றப்படவில்லை. பல முறை உத்தரவு பிறப்பித்தும், அகற்றப்படாமல் இருந்த அந்த நச்ச்சுக்கழிவுகளை அகற்றுவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து 40 ஆண்டுகள் கழிந்த பின்னர், அந்தக் கழிவுகள் இந்தூர் அருகிலுள்ள பிதாம்பூர் பகுதியில் கொட்டப்பட்டு, பாதிப்பு வராமல் அழிக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில வாயு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறையின் இயக்குநர் ஸ்வதந்திர குமார் சிங் தெரிவித்தார். இதற்காக சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு நச்சுக்கழிவுகளை அள்ளிச் செல்ல வாகனங்கள் வந்துள்ளன.