மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்து, பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளையில், 2025-ஆம் ஆண்டுக்குள் மணிப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும், அதையொட்டிய மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது இனக் கலவரமாக மாறியதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாக அங்கு வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் தொடர்கின்றன.
இந்நிலையில், இன்று இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறியதாவது:-
கடந்த ஆண்டு மே மாதம் 3 முதல் இன்று வரை நடந்த அனைத்து சம்பவங்களுக்காகவும் நான் வருந்துகிறேன். இந்த ஆண்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே இந்த விஷயத்துக்காக வருத்தப்படுகிறேன். அதோடு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இப்போது, கடந்த மூன்று, நான்கு மாதங்களில் இம்மாநிலம் அமைதியை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் 2025-ஆம் ஆண்டுக்குள் மணிப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன்.
இதுவரை ஏறத்தாழ 200 பேர் இறந்துள்ளனர். சுமார் 12,247 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 625 பேர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிபொருட்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையை கையாள்வதில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இம்மோதலில், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை கட்டித்தர போதுமான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.