புத்தாண்டு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும் என்றும், 2025ல் என்ன நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாளை 2025 ஆங்கில புத்தாண்டு பிறப்பதால் உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளனர். இந்நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நாளைய 2025 புத்தாண்டு புதிய தொடக்கமாக அமைய வேண்டும். 2024 ஆண்டு முழுவதும் மக்களிடையே நம்பிக்கையைக் கண்டுபிடிப்பது என்பது கடினமாக இருந்தது. போர்களால் ஏற்பட்ட வலி, துன்பம், இடம்பெயர்வு பல பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டனர். சமத்துவமின்மையால் பதட்டங்களும், அவநம்பிக்கையும் அதிகரித்தது. உலகம் முழுவதும் கொடிய வெப்பத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த 2024 உட்பட கடந்த 10 ஆண்டுகளில் வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நாம் வெளியேற வேண்டும். இழப்பதற்கு இது நேரமில்லை. புதுப்பிக்கத்தக்க எதிர்காலத்திற்கு நாம் மாற வேண்டும். அதுவே இன்றியமையாதது; அதுவே சாத்தியமானது.
மனிதாபிமான ஹீரோக்கள் பலர் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். தடைகளைத் தாண்டி உதவினர். நிதி மற்றும் பருவநிலைக்காக போராடும் நாடுகளின் நம்பிக்கையையும் காண்கிறேன். உலகளாவிய நிதி அமைப்பை சீர்திருத்துவதற்கும், மனித உரிமைகள், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனம் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொள்வோம்.
2025ம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அனைத்து மக்களுக்கும் மிகவும் அமைதியான, சமமான, நிலையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.