மணிப்பூருக்கு பிரதமர் ஏன் செல்லவில்லை?: ஜெய்ராம் ரமேஷ்!

மணிப்பூர் விவகாரங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டிருக்கும் நிலையில், “பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை?” என காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்று அதையே அங்கு ஏன் சொல்ல முடியாது? மே 4, 2023 முதல் அவர் நாடு மற்றும் உலகம் முழுவதும் ஜெட் விமானத்தில் பயணம் செய்தபோதும் அவர் வேண்டுமென்றே அம்மாநிலத்துக்கு வருவதைத் தவிர்த்தார். மணிப்பூர் மக்களால் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்ள முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், “கடந்த ஆண்டு மே 3 மாதம் முதல் இன்று வரை நடந்த அனைத்து சம்பவங்களுக்காகவும் நான் வருந்துகிறேன். இந்த ஆண்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே இந்த விஷயத்துக்காக வருத்தப்படுகிறேன். அதோடு நான் மன்னிப்பும் கேட்க விரும்புகிறேன். இதுவரை நடந்த நிகழ்வுகள் நடந்தவையாகவே இருக்கட்டும். அனைத்து இனக்குழுவினரும் நடந்தவற்றை மறப்போம். இப்போது, ​​கடந்த மூன்று, நான்கு மாதங்களில் இம்மாநிலம் அமைதியை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் 2025ஆம் ஆண்டுக்குள் மணிப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.