கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி நிமிஷா பிரியா கடந்த 2017-ஆம் ஆண்டு அந்நாட்டுப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை கொலை செய்துவிட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அந்தச் செவிலியின் தாய் தன் மகளை மீட்க ஒரு நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், செவிலி நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் நிமிஷாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிமிஷா பிரியாவை மீட்க குடும்பத்தினர் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் என்று அறிவோம். அரசாங்கம் இவ்விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.” என்றார்.
முன்னதாக கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமனில் செவிலியாகப் பணி புரிந்து வந்தார். அப்போது அவர் தலோல் அப்டோ மஹ்தி என்பவரிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சித்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அது முடியாததால் ஒருமுறை அவருக்கு ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தியுள்ளார். இதில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு நிமிஷா பிரியாவை ஏமன் போலீஸார் கைது செய்தனர். அப்போதிலிருந்து நிமிஷா சிறையில் உள்ளார்.
தன்னை மஹ்தி துன்புறுத்தியதாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும் அதனாலேயே அவரிடமிருந்து பாஸ்போர்ட்டை பெற முயற்சித்ததாகவும், ஆனால் அந்த முயற்சி விபரீதமாக முடியும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். அவர் தரப்பு நியாயத்தைக் கேட்காத ஏமன் அரசு அவருக்கு 2018 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இதனையடுத்து நிமிஷா பிரியாவின் தாயார் ஏமன் சென்று தன் மகளை மீட்டுவர முயற்சித்து வருகிறார். உயிரிழந்த மஹ்தி குடும்பத்தினருக்கு நஷ்டயீடு கொடுத்தாவது மகளை மீட்க வேண்டும் என்று அவரது தாயார் முயற்சித்து வருகிறார்.