அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எலான் மஸ்க். இதற்காக அவருக்கு அரசின் செலவினங்களைக் குறைப்பது தொடர்பான துறையையும் கூட டிரம்ப் ஒதுக்கியுள்ளார். இந்தச் சூழலில் அவர் பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருக்கும் ஸ்டார்மர் மீது சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார்.
அமெரிக்க அரசியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாகக் குதித்தவர் எலான் மஸ்க்.. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்பிற்காக அவர் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார். இதற்கிடையே அமெரிக்காவுக்குப் பிறகு இப்போது அவர் பிரிட்டன் அரசியல் பக்கம் போய் இருக்கிறார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்பு சிபிஎஸ் என்ற அமைப்பின் தலைவராக இருந்த போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யும் பாகிஸ்தான் கேங் உறுப்பினர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக மொத்தம் 23 போஸ்ட்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், பிரிட்டன் மன்னர் சார்லஸ் கெய்ர் ஸ்டார்மர் அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டனின் மான்செஸ்டரில் கிரிமினல் கும்பல் விசாரணைகளை அரசு சரியாகக் கையாளவில்லை என்று விமர்சிக்கும் எலான் மஸ்க், இதற்கு அந்நாட்டின் பிரதமரே காரணம் என்று விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
இங்கிலாந்தில், பலாத்காரம் போன்ற கடுமையான குற்றங்களில் குற்றஞ்சாட்ட போலீசாருக்கு கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸின் அனுமதி தேவை. சில குறிப்பிட்ட கேங்கை சேர்ந்தவர்கள் நீதியை எதிர்கொள்ளாமல் இளம் பெண்களைச் சுரண்ட அனுமதிக்கப்பட்டபோது இந்த சிபிஎஸ் அமைப்பின் தலைவராக யார் இருந்தார் தெரியுமா? அது (தற்போதைய பிரதமர்) கெய்ர் ஸ்டார்மர் தான். அவர் தான் 2008 -2013 இதன் தலைவராக இருந்தார். பலாத்கார கும்பல் குறித்து இப்போதும் அவர்கள் விசாரிக்க மறுக்கிறார்கள். ஏனென்றால் இது தொடர்பாக விசாரித்தால் உண்மையான காரணம் வெளியுலகிற்குத் தெரிந்துவிடும். அதாவது கெய்ர் ஸ்டேமரை [அந்த நேரத்தில் சிபிஎஸ் தலைவர்] குற்றம் சாட்டுவதற்கு வழிவகுக்கும் என்பதாலேயே விசாரிக்க மறுக்கிறார்கள்.
ஆறு வருடங்கள் கிரவுன் ப்ராசிகியூஷன் தலைவராக இருந்தபோது, பிரிட்டனின் பலாத்காரம் நடக்க ஸ்டார்மர் உடந்தையாக இருந்தார். ஸ்டார்மர் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.. பிரிட்டனின் வரலாற்றில் மிக மோசமான குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். மன்னர் சார்லஸ் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும். அந்நாடு நாடாளுமன்றம் உடனடியாக கலைப்பட வேண்டும்” என்று சரமாரியாக ட்வீட் செய்துள்ளார்.
அதேநேரம் எலான் மஸ்கின் இந்த குற்றச்சாட்டுகளைப் பிரிட்டன் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாகப் பிரிட்டன் அமைச்சர் ஸ்ட்ரீடிங், “எலான் மஸ்க்கிற்கு யாரோ சிலர் தவறான தகவல்களை அளித்துள்ளனர் என்பது புரிகிறது. ஆனால், நாங்கள் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். தீவிர பிரச்சினைகளில் இருந்து மக்களைக் காக்க அவரது சமூக வலைத்தளம் உதவும் என்றே நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.
வடக்கு பிரிட்டனில் உள்ள சில ஊர்களில் கடந்த 1990கள் முதல் 2013 வரை தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1,400 குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதில் பெரும்பாலும் பாகிஸ்தானைச் சேர்ந்த கேங் உறுப்பினர்களே ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. பிரிட்டனை அதிர வைத்த இந்த சம்பவத்தில் சிலருக்குப் பலர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக மீண்டும் அரசு தலைமையில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், அதை அந்நாட்டு உள்துறை துறை அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸ் நிராகரித்தார். அதுவே இந்தச் சர்ச்சைக்குக் காரணமா அமைந்தது குறிப்பிடத்தக்கது.