லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பலி!

லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். பைடனின் தவறான நிர்வாகத்தால்தான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. கடற்கரை பகுதிகளில் காற்று வேகமாக வீசுவதால் காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனால் கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகள், வாகனங்கள் நாசமாகின. சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசம் ஆகியுள்ளன.

தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள், மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டுத் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். அப்பகுதி வீடுகளில் வசித்து வந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 5 பேர் உடல் கருகி பலியாகினர் என்றும், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த காட்டுத்தீயால் சேதங்கள் அதிகரிக்கும் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில், டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ‘தெற்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த போதுமான தண்ணீர் இல்லை. அரசிடம் பணம் இல்லை. இதைத்தான் ஜோ பைடன் என்னிடம் விட்டு செல்கிறார். இதற்கு அவருக்கு நன்றி. அதிபர் ஜோ பைடனின் தவறான நிர்வாகத்திற்கான உதாரணம். தெற்கு கலிபோர்னியாவிற்கு தண்ணீரை திருப்பி விடுவதற்கான திட்டத்தை கவர்னர் நியூசோம் நிராகரித்துள்ளார். உருகும் பனியிலிருந்து தண்ணீரை கலிபோர்னியாவின் பல பகுதிகளுக்கு தினமும் திருப்பி விட வேண்டும். இந்த பேரழிவை சமாளிக்க காப்பீட்டு நிறுவனங்களிடம் போதுமான பணம் இருக்குமா? வரும் 20ம் தேதி போதுமான அளவு வேகமாக வரட்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை பார்த்து உலகப் பணக்காரரும், ஸ்பேக் எக்ஸ், எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், அனைவருக்கும் உதவும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஸ்டார்லிங்கின் டெர்மினல் சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் செய்தி நிறுவனங்களுக்கு இடையூறின்றி இணையசேவை கிடைக்கும் வகையில் இந்த முடிவெடுக்கப்படுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதுபற்றி எலான் மஸ்க் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாளை காலை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கு இலவச டெர்மினல்களை வழங்கும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் மக்களுக்கு நம்பகத்தனமான இணையவசதியைக் கொண்டிருப்பதே இதன் முக்கிய நோக்கமாகவும் கொண்டுள்ளது. இது சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அனைவருக்கும் இடையேயான தொலைத்தொடர்பை ஏற்படுத்துகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.