உக்ரைனில் வடகொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். வடகொரியா வீரர்கள் 2 பேர் காயங்களுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவுக்கு வடகொரியா மறைமுகமாக உதவி செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது 3-ம் ஆண்டை நெருங்கி வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை போரின் தொடக்கத்தில் ரஷ்யா கைப்பற்றியது. எனினும், அவற்றை பதிலடி கொடுத்து உக்ரைன் மீட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
இந்த போரில், ரஷ்யாவுக்கு வடகொரியா மறைமுக உதவி செய்கிறது என்று உக்ரைன் குற்றச்சாட்டு கூறி வருகிறது. எனினும், இது தொடர்பாக ரஷ்யா, வடகொரியா நாடுகள் தரப்பிலும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வடகொரியாவின் வீரர்கள் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், குர்ஸ்க் பகுதியில் வடகொரிய ராணுவ வீரர்கள் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு கீவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை சிறை பிடித்ததற்காக சிறப்பு படையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு நன்றி. வடகொரிய வீரர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. உலகத்திற்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக கைது செய்யப்பட்ட வீரர்களை சந்திப்பதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.