ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் சுமார் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்தது உறுதியானதை அடுத்து ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நசீர் ஜாவேத் ராணா இந்த தீர்ப்பை வழங்கினார். ஏற்கெனவே, இந்த வழக்கில் மூன்று முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. சிறை தண்டனை மட்டுமல்லாது பாகிஸ்தான் ரூபாயில் 10 லட்சம் இம்ரான் கானுக்கு அபராதம் வழங்கப்பட்டுள்ளது. அதை செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதே போல புஷ்ரா பீபிக்கு பாகிஸ்தான் ரூபாயில் 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதோடு அல்-காதர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நிலத்தையும் பறிமுதல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
‘இதையெல்லாம் ஒரு சர்வாதிகாரி செய்கிறார்’ என இம்ரான் கான் கூறியதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கான், புஷ்ரா பீபி மற்றும் ஆறு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவியை தவிர அனைவரும் பாகிஸ்தானில் இல்லை. இந்த வழக்கின் விசாரணை கடந்த டிசம்பர் 18-ம் தேதி நிறைவடைந்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். இந்த சூழலில்தான் தற்போது அவருக்கு ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.