அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ், லூசியானா மற்றும் டெக்சாஸில் கடும் பனிப்புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல வாரங்களாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் கடுமையாக வீசியதால் டெக்சாஸ், லூசியானா உள்ளிட்ட நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. நியூயார்க் மாகாணத்தில் வீசிய பனிப்புயலால் சாலைகளில் ஒன்றரை அடி உயரம் பனி குவிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் 2,200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதுடன், 3000 விமான சேவைகள் தாமதமாகி உள்ளன. மணிக்கு ஒன்றரை செ.மீ. என்ற வேகத்தில் பனித்துகள் கொட்டும் என்பதால் பயணங்களை தவிர்க்க வானிலை மையம் எச்சரித்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆர்லியன்ஸ் மற்றும் லூசியானாவில் 28 செ.மீ. உயரத்துக்கு பனித்துகள் கொட்டி வருகிறது.
வட துருவத்தைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை மாற்றம் ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பனிப்புயலுடன், பனிப்பொழிவும் வீசி வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. போக்குவரத்திலும் கடும் பாதிப்பு காணப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.