ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டியதில்லை: பிரதமர் மோடி!

“நேரு காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும்.” என டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை), டெல்லியில் உள்ள ஆர்.கே. புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

இந்தப் பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட். இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாஜக நடுத்தர வர்க்கத்தினர், நேர்மையாக வரிசெலுத்துவோரை மதிக்கும் கட்சி. புதிய பட்ஜெட்டின் மூலம், நடுத்தர வர்க்கத்தினர் அவர்களின் அன்றாட தேவைக்கான அத்தியவாசியப் பொருட்களை நுகர்தல் எளிதாகும்.

நேரு காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருந்திருக்கும். இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நீங்கள் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பாதித்தால் ரூ.2 லட்சம் வரை வரி கட்டியிருப்பீர்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் சம்பாதித்தால் ரூ. 2,60,000 வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால், பாஜக அரசின் நேற்றைய பட்ஜெட்டுக்கு பிறகு, ஒரு வருடத்தில் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டியதில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட் இதுதான்.

காங்கிரஸ் கட்சி தங்களின் சொந்த கஜானாவை வரிப் பணத்தால் நிரப்ப நினைத்தது. ஆனால் பாஜக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அக்கறை காட்டியுள்ளது. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் திட்டத்துக்கு நமது நாட்டின் இளைஞர்கள் நமக்குத் தேவை. அதனால்தான், அவர்களுக்காக அதிகளவில் இந்த பட்ஜெட்டில், நிதி ஒதுக்கி வேலைவாய்ப்புகளைக் கொண்டுவர முயற்சித்துள்ளோம். முதன்முறையாக வேலையில் இணைந்துள்ள இளைஞர்களுக்கு இந்த வரிச் சலுகை பயனுள்ளதாக அமையும்.

கடந்த 11 ஆண்டுகளில் ஆத் ஆத்மி அரசு டெல்லியை சீரழித்துவிட்டது. இந்த முறை டெல்லி மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.