பதஞ்சலி பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

போலி விளம்பரம் தொடர்பான வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கேரளா மாநிலம் பாலக்காடு நீதிமன்றம் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி ஆயுர்வேதம் என்ற பெயரில் மருந்து நிறுவனத்தை நிறுவி உள்ளார். இவரது இந்த மருந்து நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக கொரோனா காலத்தில் பாபா ராம்தேவ் செய்த விளம்பரம் பெரும் விவாதமானது. கொரோனா பாதிப்பை நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்று அவர் விளம்பரம் செய்தார். அதோடு தனது தயாரிப்புகளை அவர் விளம்பரப்படுத்தி விற்க முயன்றார். இதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வகையில் தவறான விளம்பரம் மூலம் தனது தயாரிப்புகளை மார்க்கெட்டிங் செய்வதாக கேரளா மாநிலம் மருந்து ஆய்வாளர் சார்பில் பதஞ்சலியின் துணை நிறுவனமான திவ்யா பார்மஸி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு என்பது பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி ஆஜராக வேண்டும் என்று பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்றைய தினம் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது. அதோடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.