டிரம்ப்பின் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்!

அமெரிக்காவில் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் நடவடிக்கையைக் கண்டித்து அமெரிக்க ஆயர்களுக்கு போப் பிரான்சிஸ் கடிதம் எழுதினார்.
கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

பிற நாடுகளில் ஏற்படும் மோதல்கள், வறுமை, பாதுகாப்பின்மை, சுரண்டல், துன்புறுத்தல், காலநிலை பேரழிவுகளிலிருந்து தப்பிப் பிழைத்து, அமெரிக்காவுக்கு வருபவர்களை வரவேற்று, பாதுகாக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

சொந்த நிலத்தைவிட்டு வெளியேறிய மக்களை நாடுகடத்தும் செயல், அவர்களின் கண்ணியத்தைச் பாதிக்கிறது. மற்ற நாடுகளில் குடிபெயர்ந்தோர் பாதுகாக்கப்படுகின்றனர்; ஆனால், அமெரிக்காவை நினைத்தால் கவலையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக பதவியேற்பதற்கு முன்பிலிருந்தே, நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். `புலம்பெயர்வோரைத் தடுக்கும் சுவரை எழுப்புபவர்கள் எவரும் கிறிஸ்தவர் அல்லர்’ என்று போப் முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பெரியளவிலான நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிபர் தேர்தலின்போதே டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் அதிபரானவுடன், அதற்கான நடவடிக்கையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவில் குடிவரவுத் துறைதான் நாடு கடத்தல் பணியை மேற்கொள்ளும். ஆனால், தற்போதைய டிரம்ப்பின் ராணுவத்தின் மூலமாக நாடுகடத்தும் பணியை மேற்கொள்கின்றனர்.