போப் ஆண்டவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக வாட்டிகன் தகவல்!

கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவர் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் உடல் நலம் பெற உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 88-வயதான போப் பிரான்சிஸ்க்கு சிறு வயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்டதால், பல்வேறு உடல் நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி இருப்பது கடந்த 6 ஆம் தேதி மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. எனினும், அவர் தொடர்ந்து மத பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அடுத்த சில நாட்களில் அவரது உடல் நிலை மோசம் அடைந்ததையடுத்து உடனடியாக ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது போப் பிரான்சிஸ்க்கு நிமோனியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்கள் போப் ஆண்டவர் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், அவரது உடல் நிலை இன்னும் மோசமான நிலையிலேயே இருப்பதாக வாட்டிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் சுய நினைவுடன் தான் இருக்கிறார் எனவும் மூச்சு விடுவதில் உள்ள சிரமத்திற்காக ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கு ரத்தத்தில் பிளேட்லட்கள் குறைவாக இருந்ததால் ரத்தம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் உடல் நிலை மோசமாக இருப்பதாக முதல் முறையாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.