அமெரிக்கா பரிந்துரைத்த முழுமையான போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்துள்ளது: ஜெலன்ஸ்கி!

பொதுமக்கள் வசிக்கும் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா பரிந்துரைத்த முழுமையான போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடினர். இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடம் நீடித்தது. அப்போது, உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய அதிபர் உறுதி அளித்தார். ஆனாலும், மேற்குல நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை நிறுத்தாவிட்டால் முழு போர்நிறுத்தம் சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த அழைப்புக்கு பின்பு சிறிது நேரத்தில் உக்ரைனில் வான்வழி தாக்குதல்களுக்கான எச்சரிக்கைகள் ஒலித்தன. பல இடங்களில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்த தனது எக்ஸ் பதிவொன்றில் ஜெலன்ஸ்கி கூறுகையில், “துரதிருஷ்டவசமாக பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. சுமியில் உள்ள மருத்துவமனையின் மீது நேரடி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற இரவுத் தாக்குதல்கள், எங்களுடைய எரிசக்தித்துறை, உள்கட்டமைப்பு மற்றும் உக்ரைனின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கின்றன. இன்று முழு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா லாவகமாக மீறியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உக்ரைனின் எரிசக்தி இலக்குகள் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அமைதிக்கான முக்கிய நிபந்தனையாக உக்ரைன் படைகளுக்கு மேற்குலக நாடுகள் ராணுவம் மற்றும் உளவுத்துறை உதவிகளை நிறுத்த வேண்டும் என்று கூறியிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மூன்றாண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா போரினை முடிவுக்குக் கொண்டுவர 30 நாள் போர் நிறுத்தம் ஒரு தொடக்கமாக இருக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது. இரண்டாவது முறையாக கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். அவர், ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு புரிதல் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

செவ்வாய்க்கிழமை நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது. பயனுள்ளதாக இருந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதின் – ட்ரம்ப் பேச்சுவார்த்தையின் போது உக்ரைனைப் போல் ரஷ்யாவும் 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தினார். ஆனால், புதின் அதனை முழுமையாக ஏற்கவில்லை. மாறாக 30 நாட்களுக்கு உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மட்டும் நடக்காது என்று கூறியுள்ளார்.