இலங்கை, தாய்லாந்து நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த பயணம் மேற்கொள்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து, பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானத்தில் தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் அங்குள்ள அரசு இல்லத்தில் அந்நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்திக்கிறார். அவருக்கு சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மாலையில் கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட தாய்லாந்து, வங்காள விரிகுடா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். நாளை நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இதையடுத்து தாய்லாந்து மன்னர் மகா விஜிரலோங்கோர்ன், ராணி சுதிடா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் பிரதமர் மோடியும், தாய்லாந்து பிரதமர் ஷினாவத்ராவும் தாய்லாந்தின் சிறந்த 6 கோயில்களில் ஒன்றான வாட்போவை பார்வையிடுகிறார்கள். இதன்பின்பு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார்.
இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-
அடுத்த 3 நாட்களுக்கு தாய்லாந்து மற்றும் இலங்கை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். இந்த நாடுகள் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளுடன், இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்கிறேன். பாங்காக்கில், பிரதமர் பேடாங்டம் ஷிணவத்ராவை சந்தித்து, இந்தியா மற்றும் தாய்லாந்து நட்புறவு பற்றி முழு அளவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன். பின்னர், நாளை நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். தாய்லாந்தின் அரசர் மகா விஜிரலங்கோமையும் சந்திக்க உள்ளேன்.
இலங்கைக்கான பயணம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை அமையும். இந்தியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரா குமர திசநாயகேவின் பயணம் வெற்றியடைந்ததன் தொடர்ச்சியாக எனது இந்த பயணம் அமைகிறது. இந்தியா, இலங்கை இடையேயான பன்முக தன்மை கொண்ட நட்புறவை பற்றி மறுஆய்வு செய்து, ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வோம். பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.