சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது போர் நடவடிக்கையே: பாகிஸ்தான்!

சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஈடுபட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது. பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஏப்.23) நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்பது உட்பட 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான தேசிய பாதுகாப்புக் குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் இன்று ஆலோசனை நடத்தியது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அவை வருமாறு:

சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் அறிவிப்பை பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது. இந்த ஒப்பந்தம் உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். மேலும், ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைப்பதற்கான எந்த ஏற்பாடும் இதில் இல்லை. சிந்து நதிநீர் பாகிஸ்தானின் தேசிய நலனுக்கு மிகவும் முக்கியமானது, பாகிஸ்தானின் 24 கோடி மக்களுக்கு அது உயிர்நாடி.

சிந்து நதிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த எத்தகைய விலையையும் பாகிஸ்தான் கொடுக்கும். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரின் ஓட்டத்தைத் தடுப்பது அல்லது திசைதிருப்புவது, ஆற்றின் கீழ் பகுதியின் உரிமைகளை அபகரிப்பதாகும். இது ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும். சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தான் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி பதிலளிக்கும்.

சர்வதேச மரபுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் ஆகியவற்றை மதிக்காத பொறுப்பற்ற ஒரு நாடு இந்தியா. அது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்தைத் தூண்டுகிறது, படுகொலைகளை நிகழ்த்துகிறது, காஷ்மீர் மீதான சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானங்களை பின்பற்ற மறுக்கிறது. இத்தகைய வெளிப்படையான நடத்தையை இந்தியா கைவிடும் வரை, சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தும்.

வாகா எல்லைச் சாவடியை பாகிஸ்தான் உடனடியாக மூடும். இந்தப் பாதை வழியாக இந்தியாவிலிருந்து அனைத்து எல்லை தாண்டிய போக்குவரத்தும் விதிவிலக்கு இல்லாமல் நிறுத்தப்படும். அரசின் ஒப்புதலுடன் கடந்து சென்றவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அந்த வழியாக திரும்பலாம். அதன்பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் இந்திய நாட்டினருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. சீக்கிய மத யாத்ரீகர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. SVES-இன் கீழ் பாகிஸ்தானில் தற்போது உள்ள இந்தியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானப் படைகளின் ஆலோசகர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் ஏப்ரல் 30-க்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். இந்த ஆலோசகர்களுக்கு உதவும் பணியில் உள்ள ஊழியர்களும் இந்தியாவுக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏப்ரல் 30 முதல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் வான்வெளி உடனடியாக மூடப்படும். இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் நிறுத்தப்படுகிறது.

எந்தவொரு தவறான சாகசத்துக்கு எதிராக செயல்பட, இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க நாட்டின் ஆயுதப்படைகள் முழுமையாகவும் தயாராக உள்ளன என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.