உக்ரைன் போரில் 3 நாட்கள் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை மே 8 தொடங்கி அடுத்த 3 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். 2ம் உலக போரின் வெற்றி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு போர் நிறுத்தத்தை அவர் அறிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதலில் இந்தப் போர் சில வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அது முதலில் மாதக் கணக்கிலும் பிறகு இப்போது ஆண்டுக் கணக்கிலும் நீடித்து வருகிறது. போர் முடிந்தபாடு இல்லை. ரஷ்யா உக்ரைன் போர் இந்தப் போரால் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயன்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி போர் நிறுத்தம் தொடர்பாகத் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். அதேபோல அமெரிக்க அதிபர் டிரம்பும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறார். இதற்காகத் தனியாக டீமையும் கூட அமைத்துள்ளார். இருப்பினும், போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் போரை மூன்று நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். 2ம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு கொண்டாட்டம் காரணமாக, அடுத்த மாதம் உக்ரைனில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மே 8ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி வரை 72 மணி நேரம் போர் நிறுத்தம் அமலில் இருக்கும். இந்தப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு ரஷ்யாவும் உக்ரைனை வலியுறுத்தியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். உக்ரைன் தரப்பும் இதை பின்பற்ற வேண்டும் என்று ரஷ்யா நம்புகிறது. அதேநேரம் உக்ரைன் படைகள் போர் நிறுத்தத்தை மீறினால் அதற்குப் பதிலடி கொடுக்க ரஷ்யா தயாராக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் போரில் இதுபோல தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களில் இதுபோன்ற சிறிய போர் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாதத் தொடக்கத்தில் கூட ரஷ்யா சில நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது. போர் நிறுத்தத்தை அறிவித்தாலும் ரஷ்யா ஆங்காங்கே தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது. சுமார் 3,000 முறைப் போர் நிறுத்தத்தை ரஷ்யா மீறியதாக உக்ரைன் சாடியுள்ளது.

உக்ரைன் போரைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே அதில் பல மாற்றங்கள் நடந்து வருகிறது. கடந்த வாரம் மாஸ்கோவில் அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃபை சந்தித்த ரஷ்ய அதிபர் புதின், எந்தவொரு முன்நிபந்தனைகளும் இல்லாமல் உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார். அதேநேரம் ரஷ்யாவுக்குப் போரை நிறுத்தும் எண்ணமே இல்லை எனத் தான் சந்தேகிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர், “கடந்த சில நாட்களாக புதின் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துகிறார். ஒருவேளை அவர் போரை நிறுத்த விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். உள்நாட்டில் அதிருப்தி அதிகமாக இருக்கும் நிலையில், அதைச் சமாளிக்க அவர் இதைச் செய்கிறார் என நினைக்கிறேன்” என்றார்.