ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகலில் வரலாறு காணாத மின் தடை!

ஸ்பெயின் நாடு முழுவதும், போச்சுக்கலின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டில் பல பகுதிகளில் இன்று வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் தலைநகரங்களிலும் அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியிருப்பதைப் பார்க்கும் மக்கள், எப்போது மின் விநியோகம் சீராகும் என்பது தெரியாமல் தவிப்பதாகவும், இதுபோன்றதொரு மோசமான மின் தடையை சந்தித்ததேயில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

மின் துறையில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. உடனடியாக நிலைமையை சீர் செய்யும் பணியில் பல்வேறு துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை வரலாறு காணாத வகையில் ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கலில் ஏற்பட்டிருக்கும் மின் தடையால் 50 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மின் தடைக்குக் காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

பார்சிலோனாவில் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினில், சுரங்கப் பாதைக்குள் சிக்கியிருக்கும் ரயில்களில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் பல்வேறு ரயில்களில் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் சிக்கியிருக்கலாம் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. பல மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருப்பதும், கூட்டமாக இருக்கும் கடைகளில் ஆளில்லாமல் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

பல இடங்களில் போக்குவரத்து சமிக்ஜைகள் செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐரோப்பிய மின் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் கோளாறுதான் இதற்குக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.