இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் சென்ற நேரம் பார்த்துத் திடீரென அங்குத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா இஸ்ரேல் நாட்டிற்கான தனது விமானச் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மத்தியக் கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் தன்னை சுற்றி ஹமாஸ், ஹவுதி, ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுடன் சண்டையிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக மோதல் ஓரளவு குறைந்துள்ள போதிலும், இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதேநேரம் தாக்குதல் பெரியளவில் குறைந்துவிட்டதால் மெல்ல அங்கு இயல்பு நிலையும் திரும்பி வந்தது. அதன்படி சர்வதேச விமானச் சேவையும் அங்கு நார்மலாகிவிட்டது. இந்தச் சூழலில் தான் டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான விமானம் புறப்பட்டுச் சென்றது. சரியாக அந்த நேரம் பார்த்து பென் குரியன் விமான நிலையத்திற்கு அருகே ஏவுகணைத் தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏர் இந்தியா விமானம் தரையிறங்க ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதையடுத்து அந்த ஏர் இந்தியா விமானம் அபுதாபிக்குத் திருப்பி விடப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக இஸ்ரேல் நாட்டிற்கான அனைத்து விமான சேவைகளையும் ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது. வரும் மே 6ம் தேதி வரை இந்தத் தடை அமலுக்கு இருக்கும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த ஏவுகணையே பென் குரியன் விமான நிலையத்திற்கு அருகில் தாக்கியது.. இதனால் வானத்தில் புகை மூட்டம் ஏற்பட்டது. மேலும், திடீரென விமான நிலையம் அருகே இப்படிப் புகை மூட்டம் கிளம்பியதால் பயணிகள் அச்சமடைந்தனர். செய்வதறியாமல் பீதி அடைந்தனர். இது தொடர்பாக ஏர் இந்தியா தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று காலை பென் குரியன் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தால்.. டெல்லியில் இருந்து டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI139 அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் வழக்கம் போல் அபுதாபியில் தரையிறங்கியது.. விரைவில் அந்த விமானம் டெல்லிக்குத் திரும்பும். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, டெல் அவிவ் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் எங்கள் விமானங்கள் மே 6ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போதே தாக்குதல் குறித்த தகவல் கிடைத்து, விமானம் அபுதாபிக்குத் திருப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இன்று டெல் அவிவிலிருந்து டெல்லிக்கு கிளம்பவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா மட்டுமின்றி, TUS ஏர்வேஸ் மற்றும் லுஃப்தான்சா உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் விமானச் சேவையை ரத்து செய்துவிட்டன. இந்தத் தாக்குதலால் டெல் அவிவ் விமான நிலையத்தின் செயல்பாடுகளும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியது. இருப்பினும், பிறகு அங்கு வழக்கம் போல விமானச் சேவை மீண்டும் தொடங்கியது. ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.
