நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை நோக்கிச் சென்ற மதுரை ஆதீனத்தின் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னைக் கொல்ல சதி நடப்பதாக ஆதீனம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அது தவறானது என காவல்துறை விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 3ஆம் தேதி அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் ஜேபி நட்டா, தமிழ்நாடு ஆளுநர் ரவி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆதீனங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் கடந்த 2ஆம் தேதி தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது அவர் கார் மீது மற்றொரு கார் மோதியது. இதில் காரின் பின்பகுதி சேதம் அடைந்த நிலையில் அதே காரில் ஆதீனம் சென்னை புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இந்த விபத்தில் சதி இருக்கலாம் என திருவாவாடுதுறை ஆதீனம் கூறியிருந்தார்.
இதற்கிடையே அன்றைய நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம் கார் விபத்தில் சிக்கிய போது மதுரை மீனாட்சி அருளால் தான் பிழைத்ததாகவும், இதில் தன்னை கொல்ல சதி இருப்பதாக கூறியிருந்தார். இதேபோல தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இது சதி எனவும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தனர். மேலும், விபத்தினை ஏற்படுத்தியது பழைய வெள்ளை நிற வாகனம் என்றும், அதன் முன், பின் பக்கங்களில் வாகன எண் பிளேட் இல்லை என்று தெரிய வருகிறது. மேலும் காரில் குல்லா போட்ட நபர் முன் இருக்கையில் இருந்துள்ளார் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இது திட்டமிட்ட சம்பவம் அல்ல விபத்து தான் என போலீசார் கூறினர். மேலும் கார் விபத்துக்குள்ளானது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஆதீனத்தின் கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததும், அப்போது சென்னை மார்க்கமாக மெதுவாக வந்த கார் மீது பக்கவாட்டில் உரசியது. இது தொடர்பாக ஆதினத்தைக் கொல்ல சதி நடந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது ஆதீனத்தின் கார் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனக் கூறியிருந்தனர். மேலும் மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அளித்துள்ள புகாரில், “உளுந்தூர்பேட்டை அருகே தன்னை கார் விபத்தை ஏற்படுத்தி கொல்ல சதி நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார் மதுரை ஆதீனம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஆதீனம் பொய் கூறியதும் அவரின் கார் தான் அதிவேகமாகச் சென்றதால் விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையிலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் பேசிய ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மத மோதலை தூண்டும் வகையில் அவர் செயல்படும் நிலையில், அவரது பேச்சின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்றும் விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
