ஜம்மு-காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை கூறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பிடம் வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப் கூறுகையில், வெள்ளை மாளிகை வாசல் அருகே நடந்து வரும்போதுதான் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறித்து அறிந்தோம். கடந்தகாலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஏதோ நடக்கப்போகிறது என்று எங்களுக்கு தெரியும். இந்தியாவும், பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்’ என்றார்.