நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி உயர சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்ட கள ஆய்வு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை விமானநிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.15 மணிக்கு விமானம் மூலமாக திருச்சி வருகிறார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், தி.மு.க. சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் அங்கிருந்து துவாக்குடிக்கு சென்று அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதி கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் தமிழ்நாடு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கும் முதல்-அமைச்சர், அங்கு திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், திருச்சி புத்தூர் பெரியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி உயர வெண்கல சிலையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் புகைப்படத்திற்கு முதல்-அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நடிகர்கள் ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.