இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம்: அமெரிக்க துணை ஜனாதிபதி!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கபப்ட்டது. அதேவேளை, எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது. இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பதற்றத்தை தணிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென நாம் வலியுறுத்துவோம். ஆனால், இந்த போரில் அமெரிக்கா தலையிடாது. ஏனென்றால் அடிப்படையில் இது நமது பிரச்சினை அல்ல. அமெரிக்காவின் திறனால் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்கு இதில் தொடர்பு இல்லை. இந்தியா ஆயுதத்தை கைவிடவேண்டுமென அமெரிக்காவால் கூற முடியாது. ஆயுதத்தை கைவிடுங்கள் என்று பாகிஸ்தானிடமும் கூற முடியாது. ராஜாங்க ரீதியில் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.