இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிராந்திய அமைதிக்காக அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவத்திற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்த முடிவை எளிதாக்கியதற்காக அமெரிக்காவை பாகிஸ்தான் பாராட்டுகிறது.
தெற்காசியாவில் அமைதிக்காக அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். பிராந்தியத்தை பாதித்து, அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய அதன் பயணத்தைத் தடுத்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிப்பதாக பாகிஸ்தான் நம்புகிறது. இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்கா நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் நடந்து வந்த மோதல் 4 நாட்களில் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை அறிவித்தார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளன. இரு நாடுகளும் புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.