வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு வங்கதேசத்தில் தடை விதித்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவர் நம் நாட்டுடன் நல்ல நட்பில் இருந்தார். பாகிஸ்தான், சீனாவிடம் நெருக்கம் காட்டவில்லை. ஆனால் கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது வன்முறையானது. இதையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது ஷேக் ஹசீனா நம் நாட்டில் தான் உள்ளார். இதையடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தான் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ளார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். அதேவேளையில் சீனா, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

வங்கதேசத்தில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தற்போது அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு வங்கதேசத்தில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. இதில் 1,400க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொலை குற்றச்சாட்டு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உள்ளது. அதேபோல் இன்னும் பல வழக்குகள் ஷேக் ஹசீனா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. இதனால் ஷேக் ஹசீனா கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வங்கதேசத்தில் மாணவர்கள் அமைப்பினர், எதிர்க்கட்சிகள் முன்வைத்தனர். இதனை பரிசீலனை செய்த வங்கதேச இடைக்கால அரசு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக வங்கதேச இடைக்கால அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை ஆலோசகரான ஆசீப் நஸ்ரூல் கூறுகையில், ‛‛அவாமி லீக் கட்சியும், அதன் சமூக வலைதள பக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை என்பது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அவாமி லீக் தலைவர்கள் மீதான விசாரணை முடியும் வரை நடைமுறையில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.