காசா மீது இஸ்ரேல் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலி!

காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (மே 14) அதிகாலை நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் 60 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதில் சுமார் 22 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் அமெரிக்க – இஸ்ரேலிய பிணைக் கைதியான இளைஞர் ஒருவரை ஹமாஸ் படையினர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பியதன் மறுநாளே நடைப்பெற்றுள்ளன.

இந்தத் தொடர் தாக்குதல்களினால் கான் யூனுஸ் பகுதியில் மட்டும் 10 பேர் கொல்லப்பட்டனர். ஜபாலியா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான குழந்தைகளின் உடலகளை மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர். இருப்பினும், குடியிருப்புப் பகுதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்க இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹமாஸ் படைகளின் கட்டுமானங்கள் உள்ளதால் ஜபாலியா பகுதியிலுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு நேற்று (மே 13) இரவு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்திய சில மணிநேரங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும், காசாவினுள் உணவுப் பொருள்கள், மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் நுழைவதை இஸ்ரேல் முடக்கியுள்ளது. இதனால், லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பசியில் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு கடுமையாக கண்டித்துள்ளது.