பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது மோடி அரசு: ராகுல் காந்தி!

பங்குச் சந்தை எஃப் அண்ட் ஓ (Futures and Options – F&O) வரத்தக முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, “பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் மோடி அரசு, சாதாரண முதலீட்டாளர்களை அழிவின் விளிம்பில் தள்ளுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

பங்குச் சந்தை எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தை ‘பெரு நிறுவனங்களின் விளையாட்டு’ ஆக மாறிவிட்டது என்றும், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் 2024-ஆம் ஆண்டிலேயே நான் தெளிவாகச் சொன்னேன். அமெரிக்க வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், ஆயிரக்கணக்கான கோடிகளை மோசடி செய்துள்ளதாக தற்போது ‘செபி’ (SEBI) அமைப்பே ஒப்புக்கொள்கிறது. இவ்வளவு காலமாக சேன் ஏன் அமைதியாக இருந்தது?

யாருடைய உத்தரவுக்கு கட்டுப்பட்டு மோடி அரசு கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தது? இன்னும் எத்தனை பெரிய சுறாக்கள், சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை குறைக்கின்றன? மோடி அரசு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குகிறது என்பதும், சாதாரண முதலீட்டாளர்களை அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது என்பதும் ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 2024-ம் ஆண்டு தான் வெளியிட்ட இது தொடர்பான எக்ஸ் பதிவையும் தற்போது அவர் இணைத்துள்ளார். அந்தப் பதிவில், “கட்டுப்பாடற்ற எஃப் அண்ட் ஓ வர்த்தகம் 5 ஆண்டுகளில் 45 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. 90 சதவீத சிறு முதலீட்டாளர்கள் 3 ஆண்டுகளில் ரூ.1.8 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இவ்வளவு பெரிய பாதகத்தைச் செய்யும் “பெரு முதலீட்டாளர்கள்” என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்களை செபி வெளியிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ‘ஜேன் ஸ்ட்ரீட்’ இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி வருவாய் ஈட்டியதாக எழுந்த புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது செபி முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையை எடுத்துள்ளது.