கொலம்பியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 11 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
கொலம்பியா நாட்டில் மலைத்தொடர்கள் அதிகம். அவ்வப்போது கனமழையும் பெய்யும். இதனால், பரவலாக அந்த நாட்டில் நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், கொலம்பியாவின் ஆன்டியோகியா பகுதிக்கு உட்பட்ட அப்ரியாக்கி நகராட்சி பகுதியில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். இதனை அந்நாட்டின் பேரிடர் ஆபத்து மேலாண்மைக்கான தேசிய பிரிவு தெரிவித்து உள்ளது. இந்நிலச்சரிவில் சிக்கி தங்க சுரங்க தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஆன்டியோகியா கவர்னர் அனிபல் கவிரியா, வலி தரக்கூடிய சோகம் என டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
கொலம்பியா அதிபர் இவான் டியூக்கும் வருத்தம் தெரிவித்து உள்ளார். கனமழையால் ஏற்பட்ட சோகத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.