மத கலவரத்தை துாண்டியதாக, காங்., – எம்.பி., திக்விஜய் சிங் மீது, மேலும் நான்கு வழக்குகளை, ம.பி., போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கார்கோனில் நடந்த ராம நவமி ஊர்வலத்தில், மதக் கலவரம் வெடித்தது. இதற்கு, ஒரு மசூதியில் சில இளைஞர்கள் காவிக் கொடியை ஏற்றும் படத்தை, முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டது தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வேறு மாநில மசூதியில் நடந்த சம்பவத்தை, ம.பி.,யில் நடந்ததாக திக்விஜய் சிங் சித்தரித்து, வன்முறையை துாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டது இதையடுத்து, அவர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இருந்தும், திட்டமிட்டு மத மோதலை துாண்டியதாக, பா.ஜ.,வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போபால் போலீசார், திக்விஜய் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று குவாலியர், ஜபல்பூர், நர்மதாபுரம், சாத்னா நகரங்களில் பா.ஜ.,வினர் அளித்த புகாரின் அடிப்படையில், திக்விஜய் மீது மேலும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.