இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். 21ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வருகை தரும் அவர், அங்கு முன்னணி வர்த்தக நிறுவனங்களைச் சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்க உள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்தியா நாடுகளிலும் உள்ள முக்கிய தொழில்களில் பெரிய முதலீடுகளை குறித்து அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது,
இதைத் தொடர்ந்து 22ம் தேதி புதுடெல்லி செல்லும் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தோ பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு, இரு தர்ப்பு உறவுகள், பாதுகாப்பு, பொருளாதாரம், எரிசக்தி உள்பட பல்வேறு துறைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இரு நாடுகள் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடியுடன் போரிஸ் ஜான்சன் விவாதிப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய பயணம் குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:
இந்தியா ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், இங்கிலாந்திற்கு மிகவும் மதிப்புமிக்க மூலோபாய கூட்டமைப்பாகவும் உள்ளது. எனது இந்திய பயணம் இந்தியா, பிரிட்டன் இடையே இரு நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை வழங்கும். வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முதல் பாதுகாப்பு வரையிலான அம்சங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையிலான மூலோபாய பாதுகாப்பு, ராஜதந்திர மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.