முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லி, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. அதன்படி, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லி மற்றும் தமிழகத்தில், முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில், முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பொது சுகாதார இயக்குனர் டாக்டர் ஜி ஸ்ரீனிவாச ராவ் கூறியதாவது:
தெலங்கானா மாநில அரசு முகக் கவசம் அணிவதை திரும்பப் பெறவில்லை. அது இன்னும் செயல்படுத்தப்படுகிறது. மேலும், யாராவது முகக் கவசம் அணியவில்லை என்றால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒமைக்ரான் தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா குறித்து நாம் கவனமுடன் இருக்க வேண்டும். எக்ஸ்.இ வகை கொரோனா பெரும்பாலும் காய்ச்சல் போன்றதாக இருக்கும் என கருதுகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தொற்று சாதாரண காய்ச்சல் போன்று மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.