இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர். 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் இன்று தமது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்டவை போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதல் முறையாக வாக்களிக்க உள்ள அனைத்து மாநில இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.