இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகரிக்குது: அமெரிக்கா!

இந்தியாவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவனித்துக் கொண்டிருக்கிறது என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், இந்தியா – அமெரிக்கா இடையிலான அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த சந்திப்புக்குப் பிறகு அனைவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போதுதான் இப்படிக் கூறினார் பிளிங்கன்.

பிளிங்கன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறுகையில், மனித உரிமைகள் தொடர்பான இரு தரப்புக் கருத்துக்களையும் இரு நாடுகளும் தொடர்ச்சியாக பகிர்ந்து கொண்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவில் நடந்துள்ள சில மனித உரிமை மீறல் சம்பவங்களையும், இதுதொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறது. அரசு, காவல்துறை, சிறை அதிகாரிகள் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பது கவலை தருகிறது என்று பிளிங்கன் கூறினார்.